குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி முதலமைச்சராக ஆனது முதல் சட்டப்பேரவையில் பாஜவினர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வந்ததுள்ளது.
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த முறை 115 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 16 இடங்கள் குறைவாக பெற்றுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் 16 இடங்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், மோடி முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே இந்த சரிவு தொடங்கியது. குஜராத் மாநிலத்தில் 1995ம் ஆண்டுதான் 121 இடங்களுடன் பாஜக முதன் முதலாக ஆட்சி அமைத்தது. பின்னர் 1998-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 117 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. இந்த ஆட்சி காலத்தில் 2001-ம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக மோடி முதன் முதலாக பதவியேற்றார். 2001-ம் ஆண்டு முதல் 2014 வரை பிரதமராக பொறுப்பேற்கும் வரை அவர் முதலமைச்சராக இருந்தார்.
மோடி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் 2002-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 127 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 53 இடங்களில் வெற்றி பெற்றது. 2007-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 10 இடங்கள் குறைந்து பாஜக 117 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 6 இடங்களில் அதிகம் பிடித்து 59 தொகுதிகளை கைப்பற்றியது. 2012 தேர்தலில் 2 இடங்கள் குறைந்து 115 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 இடங்கள் அதிகம் பிடித்து 61 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மோடி பிரதமரான பின்னர் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை தேர்தல் இது. இந்த தேர்தலில் பாஜக 16 இடங்கள் குறைவாகவும், காங்கிரஸ் 16 இடங்கள் அதிகமாகவும் பிடித்துள்ளது. இதனால் குஜராத் சட்டப்பேரவையில் பாஜகவின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. வாக்குச்சதவீதத்தை பொறுத்தவரை பாஜக கடந்த மூன்று தேர்தல்களில் 49 சதவீதத்தை தக்க வைத்துள்ளது. 2002-ம் ஆண்டு 35.28 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி படிபடியாக அதிகரித்து தற்போது 41.4 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.