இந்தியத் தேர்தலும் அதற்கான கூட்டணியும் எப்போதும் பல விசித்திரங்களை கொண்டது. எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று எப்போதும் கணக்கிட முடியாது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை இரு துருவங்களாக மாறி மாறி வசைபாடிக்கொண்டிருந்த தலைவர்கள், கூட்டணியின் போது கைகோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். இதற்காக கட்சித் தலைவர்கள் சொல்லும் வசனம் "அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை" என்பதே. இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவால் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் இம்முறை, பழைய நண்பனான திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இதேபோல 2004 ஆம் ஆண்டுடன் பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்ட அதிமுக, இப்போது அக்கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த இரு கட்சிகளுடனான பேச்சுவார்த்தை ஓரளவுக்கு முடிந்துவிட்ட நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். அநேகமாக இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ தகவலை அதிமுகவும் பாஜகவும் கைகோர்த்து அறிவிக்கும் என தெரிகிறது. இந்தக் கூட்டணியில் பாமக, தேமுதிகவின் நிலை என்ன என்பதும் இன்றைய நாளில் தெரிந்துவிடும். 2014 தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தனித்து நின்று வெற்றி வாகையை சூடினார். இப்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் பாஜக தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என தெரிந்து விடும்.
அதிமுக - பாஜக ஒரு பிளாஷ்பேக் !
1992 ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழகத்தின் முதல்வராஜ பதவியேற்ற ஜெயலலிதா 1998 ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். இதனையடுத்து 1998 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய வியூகத்தை அமைத்த அவர், அத்தேர்தலில் பாஜக, பாமக, மதிமுகவுடன் ஒரு புதிய கூட்டணியை அறிவித்தார். இது தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்டது. மேலும் பாஜகவுக்கு பலமாக அமைந்தது. அப்போது பாஜகவுடன் கூட்டணி என்ற ஜெயலலிதாவின் அந்த முடிவுதான் 1998 தேர்தலில் 20-க்கும் அதிகமான சிறிய கட்சிகளை இணைத்து வாஜ்பாய் ஆட்சி அமைக்க வழிவகுத்தது. அதன் பின் 13 மாதங்களில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தார் ஜெயலலிதா.
அதன் பிறகு பாஜக - திமுக கூட்டணி ஏற்பட்டு பாஜக நிலையான ஆட்சியை கொடுத்து. கொள்கை அளவில் பாஜகவும் திமுகவும் நேரெதிர். ஆனால், அதிமுகவும் பாஜகவும் ஜெயலலிதாவின் சித்தாந்தங்களும் அப்படி அல்ல. உதாரணத்திற்கு 2001 - 2004 வரை அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில்தான் பலரும் கொண்டு வர தயங்கிய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவந்தார். அதேபோல குஜராத் கலவரத்துக்கு பின்பு பலத்த சர்ச்சைக்கு பின்பு நரேந்திர மோடி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்றார். இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம். பெரும்பானைமையினருக்கு ஆதரவாகவே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில்தான் மத்திய பாஜக அரசில் திமுக அங்கம்வகித்ததுதான் அரசியல் முரண்.
2004 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி திமுக காங்கிரஸூடன் இணைந்தது. இதனையடுத்து பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சுதாரித்துக்கொண்ட ஜெயலலிதா, மதமாற்ற தடை சட்டம் உள்பட பலதை திரும்பப்பெற்றார். மேலும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை கைது செய்தார். இது இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் பாஜக - அதிமுக உறவுக்கு இடையே விரிசல் விழுந்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கோபத்துக்கும் ஆளானார். இதன் பின்பு 2009 இல் பாஜகவின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானி, தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார் ஆனால் அது பலனளிக்கவில்லை.
2014 தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்து சந்தித்துவிட்டு சென்றார். ஆனாலும், 39 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களமிறக்கினார் ஜெயலலிதா. அதில் 37 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் கூட "மோடியா இந்த லேடியா" என கேட்டார் ஜெயலலிதா. தமிழகத்தில் "லேடி"தான் என்ன மக்கள் முடிவு செய்தனர்.
இப்போதைய நிலை !
அதிமுகவின் முகமாக இருந்த ஜெயலலிதா இப்போது இல்லை. பஜாகவுக்கு தமிழகத்தில் அழுத்தமாக கால்பதிக்க வேண்டும் என்ற நிலை. தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் ஒரே நட்புள்ள கட்சி அதிமுக. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தும் உடல் நலன் குன்றி இருக்கிறார். பாமகவுடன் எப்போதும் இழுபறி இருக்கும் பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். இப்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையை பாஜக ஓரளவுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவே கருத வேண்டும்.
ஆனால், எத்தனை இடங்களில் அதிமுகவும் பாஜகவும் போட்டியிடவுள்ளது என்றும் தெரிந்துவிடும். இந்த இரு கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு எஞ்சிய இடங்களில் இதர கட்சிகள் போட்டியிடும். இன்னும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை எனவே காட்சிகள் மாறலாம், அரசியல் திரைப்படங்களின் காட்சிகள் எப்போது யாரால் "எடிட்" செய்யப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.