அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் அதிமுகவில் இருந்து மூன்று பேர் இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையிலான இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து ஒன்றுபட்ட அதிமுக மத்திய பாஜக கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள் இணைப்பு முடிந்ததும் பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் வருங்காலத்தில் தமிழகம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் எனவும் தமிழகத்திற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போதைய ஒன்றிணைந்த அதிமுகவிற்கு ஒரு கேபினட் அந்தஸ்து உடைய மத்திய அமைச்சர் பதவியும், இரண்டு இணை அமைச்சர் பதவிகளும் தருவதற்கு பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பீகாரில் மெகா கூட்டணியை உடைத்து வெளியே வந்து பாஜகவுடன் கூட்டு சேர்ந்து முதலமைச்சராகியுள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திற்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் எனவும் அது குறித்து அமித்ஷா தீவிரமாக பாஜக உயர்மட்டத் தலைவர்களுடனும் மத்திய அமைச்சர்கள் சிலருடனும் பேசி வருவதாகவும் அதற்காகத்தான் அவரது தமிழகப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.