அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் சுயேச்சையாக போட்டியிட சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகரன் முடிவு செய்துள்ளார்.
அதிமுக சார்பில் 177 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டதில் நாமக்கல் மாவட்டம்சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான சி. சந்திரசேகரனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து, சந்திரசேகரன் கொல்லிமலையில் தனது ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து செம்மேடு பகுதியில், அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அதிமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் தனது பெயரை சேர்க்க வேண்டும். தற்போது அதிமுக அறிவித்துள்ள சேந்தமங்கலம் மலைவாழ் தொகுதி சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் எஸ் சந்திரன் பல்வேறு முறைகேடான சம்பவங்களில் ஈடுபடுபவர் என்றும், அதிமுக கட்சி பணிகளை செய்யாதவர் என்றும், அவருக்கு அதிமுக தலைமை சீட்டு அறிவித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், “மின்துறை அமைச்சர் தங்கமணியின் தூண்டுதலின் பெயரில்தான் நடப்பு எம்எல்ஏவாக இருக்கும் தனக்கு சீட்டு வழங்காமல் வேறு ஒருவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்ட தனிப்பெரும் சக்தியாக வளர்ந்து கொண்டு, அதிமுகவினரை அரவணைத்து செல்வது கிடையாது. குறிப்பாக சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் என்னை சந்தித்து பேச அனுமதி அளிப்பது கிடையாது” என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர் கொல்லிமலை பகுதியில் அதிமுக கட்சி நிகழ்ச்சிகளுக்குக்கூட வருகை தராத ஒரு நபரை வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார். மேலும் இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கின்றேன். அதற்குள் தமிழக முதலமைச்சர் வேட்பாளர் பெயரை மாற்றி தமக்கு சீட்டு வழங்க வேண்டும். இல்லையென்றால் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெறுவேன் என்று உறுதிபட தெரிவித்து இருந்தார்.
சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகன் பேசி மூன்று நாட்கள் ஆன நிலையில், தற்போது, சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அத்துடன், தனக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் சந்திரசேகரன் மனு கொடுத்துள்ளார்.