ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை மற்றும் அவரது இல்லம் நினைவில்லமாக மாற்றுவது தொடர்பான முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்பதாக ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ-வான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ-வான மாஃபா பாண்டியராஜன், முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்தார். ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி, "விசாரணை ஆணையம் நாங்கள் கேட்கவில்லையே. சிபிஐ விசாரணை தான் கேட்டோம்" என தெரிவித்தது தொடர்பாக பேசிய மாஃபா பாண்டியராஜன், "இது என்னுடைய தனிப்பட்ட கருத்துத்தான். கட்சி என்ன முடிவு எடுக்கிறது? என்பதை ஓபிஎஸ்-உடன் அனைவரும் ஆலோசித்து அதன்பின் தெரிவிப்போம்" என்றார். எதுவாக இருந்தாலும் இது முக்கியமான முன்னெடுப்பு என்றார். "தர்ம யுத்தத்தின் முக்கியமான வெற்றி இது எனக் கருதுவதாகவும் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரப்போவதால் பொது எதிரியை சந்திக்க வேண்டிய நேரமிது. எனவே வெகுவிரைவில் ஒரு தாய் மக்களாக அனைவரும் இணைவதே சிறப்பாக இருக்கும் என்றும் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.