குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை பாஜக அறிவித்தவுடன் அதிமுக அம்மா அணியின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை பாஜக அறிவித்த பிறகு தான் யாருக்கு ஆதரவு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்றார். மேலும், குழம்பிய குட்டையில் எதிர்க்கட்சியினர் மீன்பிடிக்கப் பார்ப்பதாகவும், இரட்டை இலை சின்னம் அதிமுக அம்மா அணிக்கே கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். “இன்னும் நூறு ஆண்டுகள் அதிமுக தமிழகத்தில் இருக்கும். அதற்கான விழாவாகத்தான் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அமையப் போகின்றது. நாம் சரியாக இருந்தால் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களின் நிலை உங்களுக்கே தெரிந்திருக்கும். மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கு எப்படி குடும்பத்துடன் வருவீர்களோ அதேபோல் அனைவரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வர வேண்டும்” என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, மத்தியில் ஆளுங்கின்ற எந்த கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் தலையீடு செய்தால் வளர முடியாது. அதனால்தான் காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றார்.