பாஜகவில் சேர்வதற்கு சுந்தர்.சி காரணமா என்பது குறித்து நடிகை குஷ்பு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். “இருக்கிற இடத்தில் விஸ்வாசம் காட்டி வந்தேன். எதிர்க்கட்சியில் இருந்ததால் ஆளுங்கட்சியை எதிர்த்தேன். வேளாண் சட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். ஆனால் இப்போது அதை பாஜக நிறைவேற்றும்போது ஏன் எதிர்க்க வேண்டும். ஒரு திட்டத்தை எதிர்க்க வேண்டுமென்றால் அதற்கான தீர்வையும் கொடுக்க வேண்டும். ஆனால் அதை செய்வதில்லை.
நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. என் கணவருடன் எந்த நிகழ்ச்சியிலாவது பார்த்துள்ளீர்களா? அவர்கள் மேல் உள்ள கணத்தை மறைக்க என் கணவர் மீது பழி போடுகிறார்கள். எனது அரசியல் முடிவுகளுக்கு சுந்தர்.சி காரணம் என கூறக்கூடாது. நான் எந்த சினிமா படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக அண்ணாத்த படத்திற்காக மாதம் 5 நாட்கள் என சூட்டிங் போனேன். மற்ற 25 நாட்கள் காங்கிரஸ் எந்த நிகழ்வும் நடத்தவில்லையா?
நான் வெறும் நடிகை எனக்கூறுகிறார்கள். நிகழ்ச்சியில் என்னை பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டம் வரும். அதை சேர்க்க என்னை அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு நான் நடிகை என்பது தெரியவில்லையா? ஒரு பெண் புத்திசாலியாகவோ, திறமையானவளாகவோ இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். நான் நடிகைதான். நீங்கள் தலைவர் வேஷம் போட்டு நடிக்கிறீர்களே? எந்த விதத்தில் நியாயம். ரூ. 2 வாங்கி என்னைப்பற்றிய வதந்தி ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர்தான்.
மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் எனக்கூறிதான் இங்கு வந்திருக்கிறேன். நான் இங்கு பேரம் பேசிட்டு வரவில்லை. மற்றக் கட்சியில் இருந்து யாரும் காங்கிரஸுக்கு வரவில்லையா? உங்க கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு சென்றால் மட்டும் வலிக்கிறதா? காங்கிரஸில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும்” எனக் காட்டமாக கேள்வி எழுப்பினார்.