ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், 'ஒரு நாடு வல்லரசாவதை விட, விவசாயிகளைக் காக்கும் நல்லரசாக இருக்க வேண்டும்' என சமீபத்தில் நடிகர் விஜய் பேசியது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அரசியலில் நுழைய விஜய் ஆழம் பார்க்கிறரா என்றும் பேசப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருந்தாலும் கதாநாயகனான விஜய் முதலில் கால் பதித்த திரைப்படம் 'நாளைய தீர்ப்பு'.
அதன்பிறகு ஒன்ஸ் மோர், லவ் டூடே, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் காதல் சொட்டும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் விஜய்யை கொண்டாட துவங்கினர். தமிழ் மக்களின் மனதில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்தார் விஜய்.
தன்னை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர் என விஜய் உணரத் தொடங்கியதுமே தனக்கான பொறுப்பையும் உயர்த்திக் கொண்டார். சாதாரணமாக காமெடி, காதல், சோகம் என்றில்லாமல் சமூக பொறுப்பை வெளிப்படுத்தும் விதமான படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். விஜய்-யின் இத்தகைய படங்களையும் விசில் அடுத்து வரவேற்றனர் அவரது ரசிகர்கள்.
ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய் அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகுதான் அவரது ரசிகர்கள் அரசியல் ஆர்வத்தோடு பணியாற்றத் தொடங்கினார்கள். 'தலைவா' திரைப்படத்தில் 'Time To lead' எனும் வாசகம் இடம்பெற்றதால் அந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன்பின் தமிழத்தில் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் கூட மக்களுடன் மக்களாக கலந்து கொண்டார். பணமதிப்பு நீக்க விவகாரத்திலும், அரசின் நடவடிக்கை மக்களை அதிகமாக பாதித்ததாக கூறினார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய், 'ஒரு நாடு வல்லரசாவதை விட, விவசாயிகளைக் காக்கும் நல்லரசாக இருக்க வேண்டும்' என கூறியது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியது.
இந்நிலையில், விரைவில் தேர்தல் அரசியலில் கால் பதிப்பதற்கான பணிகளை விஜய், தனது மக்கள் இயக்கத்தின் மூலம் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியதாகவும், உட்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், விஜயின் 43-வது பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் ரசிகர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.