தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மை தான் அதனால் தான் அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் ரஜினிகாந்த ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்று, எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார். அப்போது மேடையில் பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியான அதிமுக ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆனால் ஒழுங்காக நடைபெறவில்லை. எல்லோரும் ஏன் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருகிறீர்கள் என்று கேட்கின்றனர். அரசியல்வாதிகளான நாங்கள் நடிக்க வருகிறோமா என்றும் கேட்கிறார்கள். நான் என் கடமையை ஒழுங்காக செய்கிறேன். ஆனால் நீங்கள் செய்யவில்லை. அதனால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். எனக்கு அரசியல் தெரியுமா? என்று கேட்கிறார்கள்.
நான் கலைஞர், மூப்பனார், சோ ஆகியோருடன் பழகியவன். எனவே அவர்களிடம் கற்றுக்கொண்ட அரசியல் எனக்கும் கொஞ்சம் தெரியும். நான் அரசியலுக்கு வருவதை வரவேற்காவிட்டாலும், ஏன்? ஏளனம் செய்கிறீர்கள். சினிமாக்காரர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்கிறார்கள். ஆமாம் உண்மை தான். நான் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன். ஆன்மிக அரசியல் என்றால் நேர்மையான, நியாயமான, ஊழல் அற்ற, சாதி, மத பேதமற்ற அரசியல். இறை நம்பிக்கை உள்ள அரசியல். அது திராவிடத்தில் இல்லையா? இனிமேல் தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள். ஜெயலலிதா இருக்கும் போது ஏன்? அரசியலுக்கு வரவில்லை என்று கேட்கிறார்கள். பயமா என்று கேட்கிறார்கள். நான் 1996ல் பேசியதை மக்கள் அறிவார்கள். அப்போ ஏன் இப்போது வருகிறீர்கள் வெற்றிடம் இருப்பதாலா? என்று கேட்கிறார்கள். ஆமாம் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன்” என்று ஆவேசமாக கூறினார். அவரது பேச்சுக்கு அரங்கமே அதிரும் அளவிற்கு அங்கு கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.