தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நியமிக்கவில்லை என்று அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட போவதாக அதிரடியாக தெரிவித்தார். மேலும், கட்சி கொடி, பெயர் உள்ளிட்டவற்றை அறிவிக்கும் வரை ரசிகர்கள் யாரும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்றும் கட்டுப்பாடு விதித்தார்.
கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்தது, ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியது என அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை ரஜினி மேற்கொண்டு வருகிறார். இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகங்களில் தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி ஆதரவாளர்கள், ரசிகர் என்று சிலர் கலந்து அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விவாதங்களில் பங்கேற்க யாரையும் நியமிக்கவில்லை; விவாதங்களில் பங்கேற்போர் கூறும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதல்ல” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் தனிநபர் யாரையும் சித்தரிக்க வேண்டாம் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரசிகர்மன்ற நிர்வாகி சுதாகர் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.