காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு? - கமல் பேசியது என்ன?

காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு? - கமல் பேசியது என்ன?
காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு? - கமல் பேசியது என்ன?
Published on

காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்துவது குறித்து கமல்ஹாசன் பேசியது தொடர்பாக விளக்கம் அளித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “ஒருவருக்கு அடிபட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்து என்றால், முதலில் நீங்கள் ரத்தத்தைதான் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், இங்கு அனைவரும் சர்ஜரிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மனிதனை மனிதன் அடித்து சாப்பிடுவது தவறு என்று உணர்ந்து கொண்டோம். அதேபோல், மனிதனும், மனிதனும் அடித்துக்கொள்வது தவறு என்று புரிந்து கொள்ள வேண்டும். 10 ஆயிரம் ஆண்டுகால நாகரீக சமுதாயத்தில் இதனைக் கூட நாம் கற்றுக் கொள்ள வில்லையா? 

ஏன் ராணுவ வீரர்கள் சாக வேண்டும்? நமது வீட்டின் பாதுகாவலர்கள் ஏன் இறக்க வேண்டும்? இருநாட்டு தரப்பிலும் சரியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால், எந்த வீரரும் இறக்க வேண்டியிருக்காது. இரண்டு தரப்பு அரசியல்வாதிகளும் சரியாக நடந்து கொண்டாலே, எல்லைக் கோடு பகுதி கட்டுப்பாட்டுடனே இருக்கும்.

மையம் என்ற இதழை நடத்தி வந்த போது, அதில், காஷ்மீர் பிரச்னை குறித்து எழுதினேன். இப்படியெல்லாம் நடக்கும் என்பதை ஊகித்தேன். ‘பொதுவாக்கெடுப்பு நடத்துவது, மக்களை பேச வைப்பது’ என எதையும் ஏன் செய்யவில்லை. எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்கள் நாட்டை பிரிக்க விரும்புகிறார்கள். நீங்கள் ஏன் அவர்களை திரும்பவும் கேட்க கூடாது. அவர்கள் செய்யமாட்டார்கள்.

பாகிஸ்தானின் ஆசாத் காஷ்மீரில், ஹீரோக்கள் போல் ஜிகாதிகளின் புகைப்படங்களை ரயில்களில் ஒட்டியிருக்கிறார்கள். நம்ம ஊர் ஹீரோக்களுக்கு கிடைப்பதை அவர்களுக்கு விட பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள். அதுவும் மிகப்பெரிய தவறு. பாகிஸ்தானை விட இந்தியா சிறந்த நாடு என்பதை நிரூபிக்க வேண்டும். அவர்களைப் போல் நாமும் நடந்து கொள்ளக் கூடாது. புது வகையான அரசியல் கலாச்சாரம் தொடங்க வேண்டும்” என்றார். 

இதனையடுத்து, கமல்ஹாசன் பேச்சு ஆங்கில ஊடங்கங்களில் திரித்து கூறப்பட்டுள்ளதாக கூறி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 30 வருடங்களுக்கு முன்பு கமல் தெரிவித்த கருத்து என்றும் காஷ்மீர் இந்தியாவின் அங்கம்தான் என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தன்னலம் பார்க்காமல் நம்மை பாதுகாத்து நிற்கும் ராணுவ, துணை ராணுவ மற்றும் மத்திய ரிசர்வ் படை வீரர்களுக்கு ஆதராக நிற்போம் என்றும் மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com