டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மாஃபிங் செய்யப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் உள்ளது என்று நடிகர் ஆனந்த்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற டிசம்பர் 21-ம் தேதிக்கு முதல் நாள் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார். இது தேர்தல் களத்தில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இரண்டு விதமான கேள்விகள் பலராலும் முன் வைக்கப்பட்டது. ஒன்று, தேர்தல் நேரத்தில் ஏன் இந்த வீடியோ வெளியிடப்பட்டது?, மற்றொன்று இந்த வீடியோ உண்மையானது தானா?.
இந்நிலையில், வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர் நடிகர் ஆனந்த்ராஜ் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, “நாங்கள் சினிமாவில் இருக்கிறோம். ஒரு வீடியோ உண்மையில் எடுக்கப்பட்டதா அல்லது மாஃபிங் செய்யப்பட்டதாக என்பது நன்றாக தெரியும். ஒரு வீடியோ சதாரணமாக எடுத்தாலும் தேதி, நேரம், காலம் எல்லாம் அதில் இருக்கும். இந்த தகவல்கள் எல்லாம் இல்லாத ஒரு வீடியோவை ஏன் வெளியிட வேண்டும்?. போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ வரை பல்வேறு வீடுகளில், தெருக்களில் வீடியோ காமிராக்கள் இருந்திருக்கும். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்திருக்கும். இதில் இருந்து எந்தவொரு வீடியோவையும் வெளியிடாமல் சந்தேகத்திற்கிடமான வீடியோவை எதற்கு வெளியிட வேண்டும்.
உடலில் துணி விலகி இருப்பதை கூட சரி செய்யாத வீடியோவை எதற்கு வெளியிட வேண்டும். இந்த வீடியோ போயஸ் இல்லத்தில் எடுக்கப்பட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. வீடியோவின் ஜன்னலில் தோன்றும் பார்ம் மரம் போயஸ் இல்லத்தில் உள்ளது. ஜெயலலிதா உடல்நலம் தேறி 3-வது மாடியில் இருந்தார். 3-வது மாடி கிட்டத்தட்ட தரை தளத்தில் இருந்து 40 அடி உயரத்தில் இருக்கும். 40 அடி உயரத்தில் இருக்கும் பார்ம் மரம் எங்கு இருக்கிறது. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
அரசியலில் பற்று இல்லாத வகையில் பேசும் தினகரன் பின்னால் ஏன் செல்ல வேண்டும். பொதுக்குழு, உயர்க்குழு கூடி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் நீக்கக் கூடும். மீதமுள்ளவர்கள் மனம் திருந்தி கட்சியில் செயல்பட வேண்டும். உண்மையான அதிமுகவை தொண்டர்கள் பின்பற்ற வேண்டும். ஒரு குடும்பத்திற்காக அதிமுக தொடங்கப்படவில்லை. சாமானியர்களுக்காவே தொடங்கப்பட்டது” என்றார்.