மதுரையில் கழிப்பறை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
மதுரை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்து அமைந்துள்ளது, அச்சம்பட்டி ஊராட்சி. இங்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறைகள் கட்டுப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு முதல், 2017ஆம் ஆண்டு வரையில் 151 பயனாளிகளின் வீடுகளில், கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக தகவல் இடம்பெற்றுள்ளன. பயனாளி ஒருவர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால், அவருக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியத் தொகை, 3 கட்டங்களாக வழங்கப்படும்.
ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த தம்பதியின் பெயரை 4 முறை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வரிசை எண்ணை மாற்றி, அடுத்தடுத்த எண்களில் ஒரே தம்பதியின் பெயர் பயன்படுத்தி இம்மோசடி சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஊராட்சி வரவு செலவு கணக்குகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டபோது, இவ்விகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக மதுரை மாவட்ட உதவி இயக்குநர் செல்லதுரையை தொடர்பு கொண்டது, 'புதிய தலைமுறை'. மோசடி குறித்து தனக்கு புகார் வரவில்லை என்றும், அதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் அதிகாரி செல்லதுரை.
மக்கள் பயன்பாட்டிற்காக மத்திய அரசு வழங்கும் நிதியை கையாடல் செய்த அதிகாரிகளின் கைகள் கைவிலங்குகளால் பூட்டப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது