சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞருக்கு அடி உதை?: போலீசார் மீது புகார்

சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞருக்கு அடி உதை?: போலீசார் மீது புகார்
சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞருக்கு அடி உதை?: போலீசார் மீது புகார்
Published on

திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் போலீஸ் விசாரணையில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கோவையிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் கண்ணன். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 13 வருடங்களாக கோவை நாயக்கன்பாளையம் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். கண்ணன், கொரோனா காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன்பிருந்து கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது சகோதரரான முருகவேல் என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் கவுண்டம்பாளையம் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணனை எழுப்பிய போலீசார் ஏழு பேர், கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக பெரியநாயக்கன் பாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பெரியநாயக்கன் பாளையம் அடுத்த நாய்க்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோவனூர் பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன் நடந்த கொலை சம்பவத்திற்கு கண்ணனை குற்றவாளி என ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயபட்டுத்திய போலீசார், இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை தகாத வார்த்தையில் திட்டியதோடு மட்டுமல்லமால், லத்தியால் அடித்தும், காலால் உதைத்தும் சித்ரவதை செய்ததாக கண்ணன் புகார் கூறுகிறார்.

மேலும், அதிகாலை 3 மணிக்கு விடுவித்த போலீசார் மீண்டும் காலை 10 மணிக்கு அழைத்துச் சென்று 12 மணி வரை உண்மையை ஒத்துக் கொள்ளுமாறு சித்திரவதை செய்ததாக புகார் கூறினார். போலீசார் கண்ணனை லத்தியால் தாக்கியதில் கண்ணனின் இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, ஷ_ காலால் எட்டி உதைத்ததால் கால் வீங்கியதால் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விசாரணையில் தாக்கப்பட்டதை வெளியில் கூறினால் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டியதாக பெரியநாயக்கன் பாளையம் போலீசார் மீது கண்ணன் புகார் கூறியிருக்கிறார்.. சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் சென்று கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளுமாறு சித்ரவதை செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கண்ணன் கோரிக்கை விடுத்ததோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் அவர் தரப்பினர் கூறியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com