விவசாய மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் உத்திரமேரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பட்டஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த செல்வம். இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இவருடைய விவசாய நிலத்தில் முனியப்பன் என்ற இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் எரிந்து கொண்டிருந்த பல்பை முனியப்பன் கழட்டிய போது விலங்குகளுக்காக வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம், குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வன விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க விவசாய நிலங்களை சுற்றி விவசாயிகள் தன்னிச்சையாக மின்வேலி அமைத்து வருகின்றனர். இதில் சிக்கி பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழக்க நேரிடுகிறது.
இது மின்சார சட்டப் பிரிவின்படி கடும் தண்டணைக்குரிய குற்றமாகும். இந்த பாதிப்புகளுக்கு விவசாயிகள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதனை மீறி மின்வேலி அமைத்தல், திருட்டு மின்சாரம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும். மேற்படி சம்பவம் தொடர்பாக உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆனந்த செல்வம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்