ராணிப்பேட்டையில் முயல் வேட்டைக்கு சென்ற நபர் வயலில் இருந்த மின்வேலியால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நள்ளிரவில் முயல் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். எல்லை பிரச்னை காரணமாக சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்வதில் இரு காவல் நிலையங்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு காலதாமதம் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சின்னகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (45). இவர் நேற்று நள்ளிரவு முயல் மற்றும் காட்டுபன்றிகளை வேட்டையாட அரக்கோணம் அடுத்த நந்திவேந்தாங்கல் மற்றும் பாராஞ்சி கிராமங்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது நந்திவேடந்தாங்கல் கிராமம் அருகே இந்துமதி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காட்டுபன்றிகள் மற்றும் எலி தொல்லைக்கு வேலியில் மின்சாரம் பாய்ச்சுவதாக தெரிகிறது. விவசாய நிலம் அருகில் அவர் சடலம் இருப்பதை கண்ட கிராம மக்கள், உடனடியாக அரக்கோணம் தாலூகா காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சோளிங்கர் காவல்துறையினர் சின்னதுரையின் சடலத்தை கைப்பற்றி, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நிலத்தில் மின்வேலி அமைத்த உரிமையாளர் இந்துமதியிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.