ஆயுதப்படை பெண் காவலர் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை, கருமாரியம்மன் கோயில் 2வது தெரு, நெடுங்குன்றத்தை சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் சத்தியலட்சுமி. இவர் 2013ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்துள்ளார். இரண்டாம் நிலை காவலராக தற்போது பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் பணியில் உள்ளார்.
இன்று காலை பணிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. பேசிக் கொண்டிருந்தவர் வீட்டிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வண்டலூர் கேளம்பாக்கம் சாலையிலுள்ள தாகூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடலை வீட்டிற்கு கொண்டு வந்த உறவினர்கள் பீர்க்கன்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த காவலரின் கணவர் என்.எஸ்.ஜி.கமாண்டோ பயிற்சி மையத்தில் காவலராக உள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.