திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் திருவாரூர் சட்டமன்றத் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணன் கடந்த 10 தினங்களாக திருவாரூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்றும், திறந்தவெளி வாகனத்தில் சென்றும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் திருவாரூர் அருகே தண்டலை என்னும் இடத்தில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் திமுகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில்,திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக மூன்று பிரிவின் கீழ் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.