வசந்த காலம் தொடங்கியதை முன்னிட்டு சீனாவை சேர்ந்த 9 முன்னணி கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் மாணவர்கள் காதலிப்பதற்காக விடுமுறை வழங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த விடுமுறை அறிவிப்பின் பின்னணியில் இருக்கும் காரணம்தான் திகைப்பூட்டச் செய்திருக்கின்றன.
இதற்காக ஏப்ரல் 1 முதல் 7ம் தேதி வரை விடுமுறையை அறிவித்த கல்லூரி நிர்வாகங்கள் தத்தம் மாணவ மாணவிகளிடம், “கல்லூரி வளாகத்தை விட்டுச் சென்று இயற்கையை ரசிக்க, வாழ்க்கையை நேசிக்க, காதல் வாழ்க்கையை அனுபவிக்க, அன்பு சார்ந்த எண்ணங்களை கற்றுத் தேறுங்கள்” எனச் சொல்லி Fall in love என்று அந்த விடுமுறைக்கான பெயரையும் அறிவித்திருக்கின்றன.
2019ம் ஆண்டு முதல் இந்த மாதிரி வசந்தகால விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டுதான் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் இன்ஸ்டைடர் தளத்தின் செய்தி மூலம் அறிய முடிகிறது.
இந்த Fall in love விடுமுறைக்கான முக்கியத்துவமும், காரணமும்!
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் சீனாவில் சமீப ஆண்டுகளாக பிறப்பு விகிதங்கள் சரிந்துக் கொண்டே வருவதால் அதனை சீர் செய்ய சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்து அதனை செயல்படுத்தி வந்தது.
ஏனெனில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தை போட்டதன் காரணமாகவே இந்த பிறப்பு விகிதம் சரிவு நிலவுவதை உணர்ந்த சீன அரசு இதனை ரத்து செய்து, புதிதாக திருமணமான தம்பதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்தால் காப்பீடு, வேலை வாய்ப்பு, வங்கிக்கடன் என பல சலுகைகளை அள்ளி வீசியும் எதுவும் எடுபடவில்லை.
இதுபோக, கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா உட்பட பல நாடுகளிலும் மக்கள் தொகை உயர்ந்த நிலையில் சீனாவில் அது சாத்தியப்படாமல் போயிருக்கிறது.
இப்படியான தொடர் பிறப்பு விகித சரிவால் நாட்டில் இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் அதிகளவில் இருப்பதால் இது பொருளாதாரத்தையும் பாதிக்கும் என சுதாரித்த சீன அரசு அதனை சரிக்கட்டவே இப்படியான திட்டங்களை கையாண்டு வருகிறது.
அதன்படியே இளம் வயதினரை காதலிக்க ஊக்கப்படுத்தும் விதமாக இந்த வசந்தகால விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.