கோவையில் மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த தர்ம ராஜ் என்பவர் மரம் அறுக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி கல்பனா கணவருக்கும், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் டீ கொண்டு போய் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்துடன் சின்னச் சின்ன வேலைகளையும் செய்து வந்தார்.
இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான கல்பனா இன்று வழக்கம்போல மரம் அறுக்கும் ஆலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது துப்பட்டா மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கியது. சட்டென கல்பனாவை இழுத்த மரம் அறுக்கும் இயந்திரம், அவரது தலையைத் துண்டித்தது. இதனால் கல்பனா பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல்துறையினர் கல்பனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயந்திரத்தில் மரத்தை வெட்டும் பகுதி திறந்து வைக்கப்பட்டிருந்ததே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.