உலகிலேயே மிகச்சிறிய வயதில் நீர் சறுக்கு விளையாடி சாதனைப் படைத்துள்ளார் செயிண்ட் ஜார்ஜை சேர்ந்த ரிச் கேஸி ஹம்பேரிஸ். கேஸி மற்றும் மிண்டி ஹம்பேரிஸ் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் 6 மாதக் குழந்தையான ரிச், நீர் சறுக்கு செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
அதில், ‘’என்னுடைய 6 மாத பிறந்தநாளைக் கொண்டாட நீர் சறுக்கு விளையாடினேன். இது பெரிய சவாலாக இருந்தது’’ என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
போவெல் ஏரியில் லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு, கைப்பிடிகள் வைத்திருக்கும் நீர் சறுக்கு போர்டில் நின்றபடி குழந்தை ரிச் பயணிக்கிறான். ரிச்சின் தந்தை கேஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
6 மாதம் 4 நாட்களான குழந்தை ரிச், இதுவரை பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளதை அவனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஆமை மேல் அமர்ந்து பயணம் செய்தல், அமெரிக்க மாநில பூங்காக்களுக்குச் செல்லுதல், குதிரைகளுடன் நேரம் செலவிடுதல் மற்றும் படகில் செல்லுதல் போன்ற பல வீடியோக்களை காணமுடியும்.
இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு, 6 மாதம் 27 நாட்களான சைலா செயிண்ட் ஓங்க் நீர் சறுக்கு விளையாடியது அதிகாரப்பூர்வமற்ற உலக சாதனையாக பேசப்பட்டது. தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார் ரிச்.
ரிச்சின் இந்த சாதனையை பல நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகையில், குழந்தையின் ஆரோக்யத்தைக் கருத்தில் கொள்ளுமாறு பலர் பெற்றோரிடம் கூறிவருகின்றனர்.