வரும் ஆண்டில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மனிப்பூர் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு மத்திய அரசை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளார் ராஜேஷ் பூஷனுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் போது உத்தரபிரதேசம் , பஞ்சாப் மற்றும் மனிப்பூரில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் விகிதம் குறைவாக இருப்பதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது. இதன் பின்னர் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆய்வு நடத்தினார். இதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் மாவட்ட வாரியாக வாரந்திர திட்டமிடல் மூலம் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த ஐந்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை தினசரி கண்காணிக்கவும், கொரோனா பரிசோதனைகளை பன்மடங்கு அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்கு தள்ளிவைப்பது குறித்து ஆலோசிக்கும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கடந்த வாரம் கூறியிருந்தது.