தன்னுடைய நான்கு வயது மகளின் டெடி பியரை அவரிடமே சேர்க்க வேண்டும் என்பதற்காக சிறுமியின் தந்தை போராடிக் கொண்டிருக்கிறது. டெடி பியருக்காக ஏன் இத்தனை மெனக்கெடல் என கேள்வி எழலாம். ஆனால் அந்த டெடி பியருக்குள் சிறுமியின் மறைந்த தாயின் இதயத்துடிப்பு சத்தம் கேட்பதால் சிறுமிக்கு தன் தாயே உடன் இருப்பது போன்ற உணர்வுடன் இருப்பாராம்.
டெய்லர் கென்னடி என்ற சிறுமியின் தந்தை அமெரிக்காவின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “என் மகளின் தாய் இறந்ததும் அவரது பாட்டி பேத்திக்காக டெடி பியர் ஒன்றை கொடுத்தார். அதில் என் மனைவியின் பதிவு செய்யப்பட்ட இதயத் துடிப்பின் ஒலியும் பொருத்தப்பட்டிருக்கும்.
அதுதான் என் மகளுக்கு எப்போதும் துணையாக இருக்கும். டெடி பியரின் காலில் அழுத்தம் கொடுக்கும் போது தனது அம்மாவின் இதயத்துடிப்பை என் மகளால் கேட்க முடியும். ஆனால் தவறுதலாக டேஸ்வெல்-ல் உள்ள ஒரு கடையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.” என்றிருக்கிறார்.
ஆகையால், டேஸ்வெல் பகுதி மக்களிடம் வெளிப்படையாக டெய்லர் கென்னடி வலியுறுத்தியுள்ளார். அதில், “மகளின் டெடி பியரை எவரேனும் கண்டுபிடித்தாலோ பார்த்தாலோ தயவுசெய்து தெரிவியுங்கள். ஒருவேளை அதனை வாங்கிச் சென்றவர்கள் அதனை திருப்பிக் கொடுத்தால் அதற்கான விலையை கட்டாயம் கொடுத்துவிடுகிறோம்.” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த செய்தி அமெரிக்கா முழுக்கவே பரவியதோடு பலரும் அந்த குறிப்பிட்ட கடையை தொடர்புகொண்டு தான் டெடி பியரை பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் அந்த கலர்ஃபுல் டெடி பியர் குறிப்பிட்ட கடைக்குள்ளேயேதான் இருக்க வேண்டும் என நம்புவதாக கடையின் மேலாளர் தெரிவித்திருக்கிறார். இதுபோக கடையின் நுழைவு வாயிலேயே டெடி பியர் குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருக்கிறதாம்.