குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் படேல் மற்றும் அல்பேஷ் தாகூர் ஆகிய 3 இளைஞர்களின் எழுச்சி அதிக கவனம் பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக அரசுக்கு காங்கிரஸ் சவால் விடும் வகையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு சமுதாய அமைப்புகளின் இளைஞர்கள் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக மக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்திய இளைஞர் ஜிக்னேஷ் மேவானி சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். குஜராத் தேர்தல் குறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், அனைத்து தரப்பினரும் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். குஜராத் தேர்தலில் நான் வெற்றிபெற்று சட்டசபைக்குள் செல்வேன். சட்டசபைக்குள் சென்றால் எங்கள் செயல்பாடு கிரிக்கெட் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மன் போன்று அதிரடியாக இருக்கும். குஜராத் மக்களுக்கு உண்மையான வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போராடி வருகின்றோம். எல்லா சமுதாயத்தினருக்கும் வளர்ச்சி தேவை என்ற வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோம். பாஜக ஆட்சியில் நகர பகுதிகள் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன, அதற்கான நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகள் இன்னும் வளர்ச்சியடையாமல் உள்ளன என்று கூறினார்.