ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்த நிலையில் 3 பிடிபி எம்.எல்.ஏ.க்கள் மெஹபூபா முப்ஃதிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். கட்சியில் இருந்து விலகுவதாக 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர். மெஹபூபாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இம்ரான் ரஷா அன்சாரி அவரை திறமையில்லாதவர் என விமர்சித்துள்ளார். மெஹபூபாவின் அலட்சியத்தால் ஆட்சியை இழந்து தற்போது நிற்பதாகவும் அன்சாரி மேலும் விமர்சனம் செய்துள்ளார். பாஜக ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மெஹபூபாவின் கட்சியை சேர்ந்த அன்சாரி மற்றும் 2 எமெ.எல்.ஏ.க்கள் அவருக்கு எதிராக தற்போது போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். மெஹபூபாவின் குடும்பத்தினர் கட்சி விவகாரங்களில் தலையிடுவதாகவும் , மெஹபூபா அது குறித்தெல்லாம் கவலையில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக அதிகப்படியான நிதியை ஒதுக்கிய நிலையில் தனது திறமையின்மையால் மெஹபூபா ஆட்சியை இழந்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் இவர்கள் 3 பேரும் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.