Street food என சொல்லக் கூடிய சாலையோர கடைகளில் விற்கப்படும் உணவு பண்டங்களை பிடிக்காதவர்கள் வெகு சிலராகத்தான் இருப்பார்கள். பெரும்பாலும் நொருக்கு தீனிகள் அல்லது சாட் வகைகளை கொண்ட கடைகள்தான் சாலையோரங்களில் நடத்தப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் எப்போதும் மவுசு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அதேவேளையில் இந்த சாலையோர கடைகளுக்கு என குறிப்பிட்ட வரம்புகளோ, விதிமுறைகளோ இருப்பதில்லை. வியாபாரிகள் தங்களது கடைகளை எங்கு வேண்டுமானாலும் ரிமோட் டைப்பில் கொண்டு செல்லலாம், நிறுத்தி வைக்கலாம். இதற்கென மிகப்பெரிய பிரயத்தனங்களை செய்ய வேண்டியதில்லை.
குறிப்பாக பட்ஜெட்டில் லட்சக் கணக்கில் தொகையை முதலீடு செய்ய வேண்டியதில்லை. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் சாலையோர கடைகளில் விற்கப்படும் உணவு பண்டங்களுக்கு தனி வரவேற்பு எப்போதும் உண்டு. இந்த ஸ்ட்ரீட் ஃபுட் வியாபாரத்தின் நாடியை பிடித்த பி.டெக் பட்டதாரியான இளம் பெண் ஒருவர் அதனை மக்களுக்கு ஆரோக்கியமான முறையில் கொடுக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு அசத்தி வருகிறாராம்.
டாப்சி உபாத்யாய் என்ற 21 வயது இளம்பெண் தனது பி.டெக் பட்டத்தை முடித்த கையோடு, ஸ்ட்ரீட் ஃபுட் பிசினஸில் காலெடுத்து வைத்திருக்கிறார். மேற்கு டெல்லி பகுதிகளில் சாட் உணவு பண்டங்களை விற்று வருகிறார் டாப்சி. are you hungry என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ரீல்ஸ் வீடியோ மூலம் அண்மையில் டாப்சி உபாத்யாய் நெட்டிசன்களிடையே பெருமளவில் வைரலாகி இருக்கிறது.
அதில் “நிறையே பேர் என்னிடம், ‘நீ ஒரு பட்டதாரி. எதுக்கு இப்படி ரோட்டுல வந்து பானி பூரி வித்துட்டு இருக்க. பொண்ணா இருக்க. வீட்டுக்கு போய் வேலைய பாரு. இல்லனா எதனா ஆஃபிஸ் வேலையா போய் சேரு’என சொல்லியிருக்காங்க.” என்று டாப்சி பேசியிருக்கிறார்.
கிட்டத்தட்ட லட்சக்கணக்கானோரை ஈர்த்த இந்த வீடியோவில் டாப்சி, புல்லட் பைக்கில் தன்னுடைய பானி பூரி கடையை இணைத்த படி வண்டி ஓட்டியதும் பதிவாகியிருக்கிறது. அதில் இணையவாசிகளை கவர்ந்தது டாப்சி தனது கடையில் செயல்படும் விதம்தான்.
ஏனெனில் மற்ற சாலையோர கடைகளை போன இல்லாமல், மக்களுக்கு ஆரோக்கியமான சாட் வகைகளை கொடுப்பதற்காக மைதா கலக்காத அங்கேயே தயாரிக்கப்படும் பானி பூரிகளை கொண்டே டாப்சி விற்பனை செய்கிறாராம். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதற்கான தட்டுகள், கப்புகளையே பயன்படுத்துகிறார்.
கையில் கையுறை அணிந்து, மிகவும் பக்குவமாக கையாளுகிறார். தன்னுடைய கடையில் இன்னும் சில சாட் வகைகளை சேர்க்க உள்ளதாகவும் டாப்சி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். டாப்சியின் இந்த முன்னெடுப்புக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார்கள்.
அதில், “பட்டம் படித்துவிட்டதால் மட்டுமே நல்ல வேலை கிடைத்துவிடும் என்பதில்லை. அனைவராலும் 9-5 வேலையை பார்த்துவிட முடியாது. டாப்சி தனக்கென சொந்தமாக ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அது வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்களுக்கும் உரியது” என ஒரு பதிவர் குறிப்பிட்டிருக்கிறார். இப்படியாக பலரும் டாப்சி உபாத்யாய்க்கு ஆதரவாக பதிவிட்டு அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்திருக்கிறார்கள்.