இந்தியாவின் 2019 மக்களவைத் தேர்தல்தான் உலகத்தில் அதிக செலவில் நடத்தப்படும் தேர்தல் என மிலன் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு முனைப்புடன் செய்துவருகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை ஆகியவற்றை செய்துவருகிறது. இதுமட்டுமின்றி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் அந்தந்த மாநிலங்களில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல்தான் உலகத்தில் அதிக செலவில் நடைபெறும் தேர்தல் என்று மிலன் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இவர் ஒரு திறனாய்வாளர். கார்னிஜி எண்டவ்மெண்ட் ஃபார் பீஸ் திங்டேங் அமைப்பின் மூத்த ஆய்வாளர். இதுகுறித்து பிடிஐ நிறுவனத்திற்கு இவர் அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் 2016ல் நடந்த நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகிய இரண்டிற்குமான செலவு 6.5 பில்லியன் டாலர்தான். ஆனால் இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் மொத்த செலவு 5 பில்லியன் டாலர். இதனால் தற்போது 2019ல் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் உலகத்தில் நடைபெறும் அதிக செலவான தேர்தல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மேலும் இந்தியா தான் தேர்தல் செலவுகளில் வெளிப்படைத் தன்மையில்லாத நாடு. அதாவது இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு பணமளித்தவர் யார் என்பதை கண்டறிவது மிகவும் கடினம். அத்துடன் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் பத்திர முறையும் வெளிப்படை தன்மையுடைதாக இல்லை. இதனால் இந்தியாவில் தேர்தல் காலங்களில் அதிக அளவில் பணம் செலவழிக்கப் படுகின்றது” எனத் கூறியுள்ளார்.