பெரிய வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் அளவில் நீடித்துவரும் நிலையில், பெரம்பலூர் அருகே 2000 டன் பெரிய வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே இரூர், சத்திரமனை, மங்கூன் ஆகிய பகுதிகளில் செயல்படாத கோழிப்பண்ணைகளில் 2000 டன் பெரிய வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்தாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து பெரிய வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து குடிமைப்பொருள் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தபோது, 40 நாட்களுக்கும் மேலாக வெங்காயம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கோழிப்பண்ணையை வாடகைக்கு விட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள். வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினரும் பதுக்கல் இடத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருள்களில் இருந்து பெரிய வெங்காயத்தை மத்திய அரசு நீக்கிவிட்டதால் பதுக்கல்காரர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 டன்னிற்கு மேல் பெரிய வெங்காயத்தை இருப்பு வைக்கக்கூடாது என்றும் குடிமைப்பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.