அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பட்டுப்புடவை வழங்க டோக்கன் அச்சடிக்கும்போது கையும் களவுமாக சிக்கிய பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் உட்பட நான்கு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி சந்தாசாகிப் தெருவில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் அச்சடித்து ஆட்டோவில் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். அப்போது திமுகவின் திருவல்லிக்கேணி பகுதி தலைவர் செழியன் மற்றும் கட்சியினர் அதை கண்டு பிரிண்டிங் பிரஸ் உரிமையாளரான பகவதியப்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ராயப்பேட்டை போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் ராயப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பகவதியப்பனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி 143வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான இம்மானுவேல் என்பவர் தொகுதி வாக்காளர்களுக்கு இலவசமாக 2000 ரூபாய் பட்டுச்சேலை வழங்குவதற்காக 10,000 டோக்கன் அச்சடிக்க ஏஜெண்ட் தனசேகரிடம் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் டோக்கனை அச்சடித்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர், அம்பத்தூரை சேர்ந்த பகவதியப்பன், மேனேஜர் ராயப்பேட்டையை சேர்ந்த வசந்த், ஆட்டோ ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன், ஏஜெண்ட் தனசேகர் ஆகிய நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக வேட்பாளர் இம்மானுவேலிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.