பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளை ஒதுக்கீடு செய்திருக்கிறது, அதிமுக. இதன் மூலம் 8 நாட்களாக நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்திருக்கிறது.
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் தமிழக அரசியல் களத்தில் அனல் தெறிக்க தொடங்கிவிட்டது. அதில் ஆளும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேசிய கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதற்கு நேற்றிரவு சரியாக 11.43மணிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது, அதிமுக.
8 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தைகளில், இழுபறி நீடித்து வந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கடந்த 27ஆம் தேதி சென்னைக்கு வந்தார், உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது, அவரை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-சும், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்-சும் சந்தித்து, சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அன்றைய தினமே இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 60 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கிய பாஜக, அதில் 33 இடங்களை நிச்சயம் ஒதுக்க வேண்டும் அழுத்தம் கொடுத்து வந்தது. பாமகவுக்கு ஏற்கனவே 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் 2ஆவது பெரிய கட்சியாக இடம்பெற வேண்டுமென்பதில் பாஜக உறுதியாக இருந்திருக்கிறது. இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் 28 இடங்களை ஒதுக்க பாஜக வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், அதிமுக தரப்பில் 20 முதல் 25 தொகுதிகளே வழங்க வாய்ப்புகள் இருக்கிறது என்ற செய்தியை புதிய தலைமுறை பதிவு செய்து வந்தது.
கன்னியாகுமரியில் நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருக்கும் நிலையில் அதிமுக பாஜக இடையே தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றுள்ள பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஊட்டியிலும், மாநிலத் தலைவர் எல்.முருகன் திருச்சியிலும் தங்கியிருக்கின்றனர். அவரவர் இருக்கும் இடங்களில் இருந்தே, தொலைபேசி வாயிலாக பேசி முடித்து, மின்னஞ்சல் மூலம் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள அடுத்த முக்கிய கட்சியான தேமுதிகவுடன் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் வழங்க அதிமுக முன் வந்துள்ள நிலையில், தேமுதிக கூடுதல் இடங்களைக் கேட்பதே இழுபறிக்குக் காரணம் எனக்கூறப்படுகிறது. 170 இடங்களில் அதிமுக களமிறங்கத் திட்டமிட்டுள்ள நிலையில், தேமுதிக, தமாகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்? பாஜகவுக்கு எந்தெந்தத் தொகுதிகளில் வழங்கப்பட உள்ளன என்பது விரைவில் தெரியவரும்.