உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் 15 பேர் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகும் முன்னரே உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி கூட்டணியை அறிவித்திருந்தது. அதன்பின்னர் அதற்கான தொகுதி பங்கீட்டையும் அகிலேஷ் - மாயாவதி கூட்டாக வெளியிட்டனர். அதன்படி மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாடி 37 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தங்களுடைய கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தாள் கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கி இருந்தன. அத்துடன், ராகுல் காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் 15 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்களில் 11 பேர் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்கள். குறிப்பாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட விஜய் பிரகாஷ் ஜெய்ஷ்வால் பாஜகவில் சேர்ந்துள்ளார். அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளர் உம்மது பிரதாப் சிங்கும் பாஜகவில் இணைந்துள்ளார்.
மேலும், இவர்களுடன் சேர்த்து பிற கட்சிகளிலிருந்து 13 பேரும் பாஜகவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் சமாஜ்வாடி, காங்கிரஸ், ராஸ்டிரிய லோக் தள் ஆகிய கட்சிகளில் இருந்து பிரிந்து பாஜகவிற்கு சென்றுள்ளனர். “பிறகட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஏனென்றால் அவர்கள் பாஜகவிற்கு அதிக வாக்குகளை பேற்று தருவார்கள்” என பாஜக கூறியிருந்தது.