தமிழகத்தில் 12 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளதாகவும் 30 வயதுக்கு மேலுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை எம்.எம்.சி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது மரக்கன்றுகளையும் நட்டார்.
பின்னர் பேசிய அவர், இந்தியாவில் 6 கோடியே 9 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், அதில், தமிழகத்தில் மட்டும் 12 சதவிகித மக்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதாகவும் கூறினார். இந்தியாவைப் பொறுத்தவரை 30 வயதிலிருந்தே நீரிழிவு நோயின் தாக்கம் தொடங்குகிறது எனவும் அவர் கூறினார். எனவே 30 வயதுக்கும் மேலுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து நீரிழிவு நோய் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்றும் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.