ராமநாதபுரத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி 116 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 149 துப்பாக்கிகளில், முக்கிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் 32 துப்பாக்கிகள் தவிர 116 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய, கெட்ட நடத்தை மற்றும் சந்தேக நபர்கள் என சுமார் 1618 நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து, அதில் 1278 நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் 567 நபர்கள் எந்த பிரச்சனையிலும் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் புதிதாக 98 குற்றவாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத பணம் மற்றும் பொருட்கள் கடத்தலை தடுக்க 18 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தகவல் தெரிவித்துள்ளார்.