100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கைகளால் வண்ண அச்சு வைத்து பொதுமக்கள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி தனி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் நாளன்று 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். இதை வலியுறுத்தி, பூந்தமல்லியை அடுத்துள்ள குமனன்சாவடி பஸ் நிலையத்தில், கண்டிப்பாக வாக்களிப்பேன் என்ற வாசகத்துடன் கூடிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில், அந்த வழியே சென்ற பொதுமக்கள், போலீசார், கல்லூரி மாணவர்கள், மாற்று திறனாளி என அனைவரும் தங்களது உள்ளங்கைகளில் வண்ணமயமான கலர் தடவி அதை பேனரில் பதித்து வாக்களிப்பேன் என வாக்குறுதி அளித்தனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர் பிரீத்தி பார்கவி தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் ஏராளமானோர் தங்களது உள்ளங்கைகளில் வண்ணங்களை எடுத்து பேனரில் பதித்து தேர்தல் நேரத்தில் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்று வண்ண அச்சு வைத்தனர். மேலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்களுக்கு காகிதத்தால் ஆன விதை பரிசாக வழங்கப்பட்டது.