மணப்பாறை அருகே முட்புதரில் வீசப்பட்ட 10 மாத பெண் குழந்தையை போலீஸார் மீட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்கு அருகே உள்ள மருத்துவமனைத் தெருவின் கடைசியில் உள்ள முட்புதரில் கைக் குழந்தை ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து காவல் ஆய்வாளர் ஜெயதேவி தலைமையிலான, போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அங்கு முட்செடிகளுக்கு நடுவே பிறந்து சுமார் 10 மாதங்களான பெண் குழந்தை ஒன்று கிடந்தது. உயிருடன் இருந்த அந்த குழந்தையை மீட்ட போலீஸார், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர். பின்னர் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தை நலம் குறித்து குழந்தைகள் நலமருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் குழந்தை திருச்சி சைல்டு லைன் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முட்புதரில் குழந்தையை வீசி சென்றது யார் ? என்பது குறித்து, துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.