வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானதே என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிமுக அரசின் கடைசி கூட்டத்தொடரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவீதத்தை வன்னியர்களுக்கு ஒதுக்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. 68 சாதிகளை கொண்ட சீர்மரபினர் பிரிவுக்கு 7 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு வன்னியர்கள் தவிர மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தற்காலிகமானதே என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, வன்னியர் இடஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பிறகு குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் வன்னியர் இடஒதுக்கீடு கூடுவதற்கும் அல்லது குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.