ஒரேநாளில் தேர்தல் பறக்கும் படையினர் காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து நடத்திய வாகன சோதனையில் 22 இடங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 10.35 கோடி ரூபாய், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் சென்னை காவல்துறையினர் ஒருங்கிணைந்து சென்னையின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறி செயல்படுவோர் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை பெருநகரில், ஒருங்கிணைந்து நடத்திய வாகன சோதனையில் 22 இடங்களில் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட 10.35 கோடி பணம், லேப்டாப், செல்போன்கள் அடங்கிய எலக்டிரானிக் பொருட்கள், 90 அரிசி மூட்டைகள் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைப்பற்றப்பட்ட பணம், பொருட்கள், வாகனங்கள் மற்றும் வாகனத்தில் வந்த நபர்களுடன் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் அதிகபட்சமாக, சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற சோதனையில் ஒரு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட பணம் ரூ.3,59,00,000, திருவல்லிக்கேணியில் வாகனத்தில் ரூ.2,53,00,000, ஓட்டேரியில் ஒரு வாகனத்தில் ரூ.1,31,00,000, மயிலாப்பூரில் ஒரு வாகனத்தில் 1,14,93,900, ஜாம்பஜாரில் ஒரு வாகனத்தில் 18 லேப்டாப்கள், 8 கேமராக்கள், 67 ஐபோன்கள், 20 ஆப்பிள் கைக்கடிகாரங்கள் உட்பட எலக்டிரானிக் பொருட்கள் ஆகியவை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.