“பாஜக சமூகநீதியை கொலை செய்ய துணிந்துவிட்டது” - கருணாஸ் காட்டம்

“பாஜக சமூகநீதியை கொலை செய்ய துணிந்துவிட்டது” - கருணாஸ் காட்டம்
“பாஜக சமூகநீதியை கொலை செய்ய துணிந்துவிட்டது” - கருணாஸ் காட்டம்
Published on

பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க வழிவகுக்கும் ‌சட்ட மசோதாவை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் எம்.எல்.ஏ கருணாஸ்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க வழிவகுக்கும் ‌சட்ட மசோதா நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதிலும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதிலும் பின் தங்கியிருப்பதாக இந்த மசோதா‌வில் கூறப்பட்டுள்ளது. எனவே, இத்தரப்பினரின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்காக சட்டப்பிரிவு 15-ல் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதி அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ளதாகவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோத தற்போது இருக்கும் இடஒதுக்கீட்டை காலி செய்டும் விதமாக அமைந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று அதிமுக கட்சியை சேர்ந்த தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், பிரதமர் மோடி உறுதியளித்தபடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே இருக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில் “இடஒதுக்கீடு என்பது வறுமையில் உள்ளோர் அனைவரும் பெற்றுக்கொள்ளும் இலவசத் திட்டமல்ல; மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்படும் சமூகநீதி விடுதலைக்கான திறவுகோல்” என்று நடிகர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.  

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிகையில், “இத்தகைய சமூகநீதிக் கோட்பாட்டை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டுமென்று பா.ஜ.க.அரசு செய்யும் சதியே இது. இந்தப் பொருளாதரா ரீதியான இடஒதுக்கீடு வரவேற்க தக்கதல்ல மிகவும் கண்டிக்கத்தக்கது. 

மிகவும் நுட்பமாக தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அவர்களின் நோக்கம் முற்பட்ட வகுப்பைச் சார்ந்த ஏழை எளியோரை மேம்படுத்துவது என்பதல்ல; மாறாக, சமூகநீதிக் கோட்பாட்டை அழித்தொழிப்பது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஒரு பிரிவினருக்கு நடைமுறைப் படுத்திவிட்டால், காலப்போக்கில் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த முயற்சியை செய்கிகிறார்கள்.

வெளிநாடு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் செலுத்துவதாக கடந்த தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றி இருந்தால் இந்தியாவில் இந்த நிலையே வந்திருக்காது. ஏழைகளே இல்லையென்றால் பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடும் தேவைப்படாது.

சமூக ரீதியாக மட்டுமே இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது. பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க முடியாது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் ஊழல்தான் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் எனப் பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கும் சூழல் ஏற்படும்.

பா.ஜ.க. அரசு வருகிற நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு இந்தச் சதிவேலையை நுட்பமாக செய்ய நினைக்கிறது.  சமூகநீதியை இவர்கள் கொலை செய்ய துணிந்துவிட்டார்கள். நாம் அதை முறியடிக்க போராடவேண்டும்” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com