நள்ளிரவு 12 மணியானாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தயாராக இருப்பதாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று பாஜகவும், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கால அவகாசம் வேண்டுமென காங்கிரஸ் - மஜதவும் சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மாலை 6 மணிக்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஒத்திவைக்கப்பட்ட அவை இரண்டு மணி நேரத்திற்கு பின் 8.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேச வந்தார். ஆனால், அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என முழக்கமிட்டு காங்கிரஸ்-மஜத உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய சபாநாயகர், “உங்களுக்கு வாக்களித்த 6 கோடி மக்களுக்கு பயந்தால் இப்படி செயல்படமாட்டீர்கள். எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்க முடியாமல் நான் எப்படி இங்கே அமர்ந்திருக்க முடியும். நள்ளிரவு 12 மணி வரை அவையை நடத்த தயார். உறுப்பினர்கள் இவ்வாறு செயல்படுவது சரியல்ல” என்று கூறினார்.
அமளிக்கு நடுவே பேசிய எடியூரப்பா, “நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்தி மெஜாரிட்டையை நிரூபிப்பதாக முதல்வர் உறுதி அளித்திருந்தார். தலைமை கொறடா சுனில் உடன் இதுகுறித்து பேசினேன். நள்ளிரவு 12 மணியானாலும் அவையில் நாங்கள் இருப்போம்.” என்றார்
காங்கிரஸ் - மஜத உறுப்பினர்கள் பேசும்போது “ நாங்கள் அமளியில் ஈடுபடவில்லை. எங்களது தலைமை கொறடா கேட்டுக் கொண்டதற்கு இணங்க நேற்று இரவு வரை நாங்கள் அவையில் இருந்தோம். அனைத்து விவாதங்களையும் கேட்டோம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதியுங்கள்” என்று கூறினார்.
முன்னதாக, முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் பரவியது. பின்னர், அந்த கடிதம் போலியானது என முதலமைச்சர் அலுவலகம் தெளிவுபடுத்தியது.