'என் தம்பியுடன் கடைசியாக ஒரு முறை பேசியிருக்க வேண்டும்'-பென்னிக்ஸின் சகோதரி உருக்கம்

'என் தம்பியுடன் கடைசியாக ஒரு முறை பேசியிருக்க வேண்டும்'-பென்னிக்ஸின் சகோதரி உருக்கம்
'என் தம்பியுடன் கடைசியாக ஒரு முறை பேசியிருக்க வேண்டும்'-பென்னிக்ஸின் சகோதரி உருக்கம்
Published on
கடந்த மாதம் இதே நாளில் (ஜூன் 19) தனது சகோதரர் இம்மானுவேல் பென்னிக்ஸிடமிருந்து தனக்கு போன் வந்ததாகவும் அச்சமயத்தில் தான் வேறொரு அழைப்பில் பேசிக்கொண்டிருந்ததால் தம்பியின் அழைப்பை ஏற்க முடியவில்லை என்றும் அதுவே பென்னிக்ஸ் தனக்கு செய்த கடைசி போன் கால் என்றும் ஜெயராஜின் மகள் பெர்சி உருக்கமாக கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவ்விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை, காவலர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜெயராஜின் மகள் பெர்சி பேட்டி ஒன்றில் கூறும்போது, “என் தம்பி பென்னிக்ஸ் எப்போதும் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முறை போன் பண்ணி பேசுவார். பெரும்பாலும் வீடியோ கால் செய்து எனது குழந்தைகளுடன் ஜாலியாக பேசுவார்.
பென்னிக்ஸ் கைது செய்யப்பட்ட ஜூன் 19-ம் தேதி எனக்கு போன் செய்தான். எனக்கு அப்போது கைது செய்யப்பட்டிருப்பது தெரியாது. அவன் போன் பண்ணும்போது நான் வேறொரு அழைப்பில் இருந்தேன். அதன்பின் மீண்டும் அவனுக்கு போன் செய்யவில்லை. சிறிது நேரத்தில் பொள்ளாச்சியில் இருக்கும் எனது தங்கை பியூலா என்னை அழைத்து, தம்பியும் அப்பாவும் கைது செய்யப்பட்ட தகவலை சொன்னார். எதற்காக கைது செய்யப்பட்டார்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக பென்னிக்ஸ்க்கு போன் செய்தேன். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததால் அவன் போனை எடுக்கவில்லை.
பென்னிக்ஸ், தான் போலீசாரால் பிடித்து செல்லப்பட்ட விஷயத்தை சொல்வதற்காக போன் செய்தது எனக்கு தெரியாது. அவனிடம் நான் போனில் பேசியிருக்க வேண்டும். பதட்டம் அடையாமல் அமைதியாக இருக்கும்படி நான் அவனுக்கு தைரியம் சொல்லியிருப்பேன். என் தம்பியின் கடைசி போன் காலை அட்டர்ன் பண்ணாதது மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது’’ என தழுதழுக்கிறார் பெர்சி.
மேலும் அவர் எங்களுக்கு நீதிமன்றம் மீதும், சி.பி.ஐ. மீதும் நம்பிக்கை இருக்கிறது. நீதி கிடைக்க அரசும், நீதித்துறையும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் தாமதம் இல்லாமல் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். எதற்காக விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்றால், இந்த மாதிரியான ஒரு கொடூர செயல் இனி தமிழகத்தில் எந்த ஊரிலும், எந்த நாட்டிலும் நடக்கக்கூடாது’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com