Webcam ஆன் செய்யாதவரை வேலையை விட்டு தூக்கிய US நிறுவனம்: ₹60 லட்சம் ஃபைன் போட்ட நீதிமன்றம்

Webcam ஆன் செய்யாதவரை வேலையை விட்டு தூக்கிய US நிறுவனம்: ₹60 லட்சம் ஃபைன் போட்ட நீதிமன்றம்
Webcam ஆன் செய்யாதவரை வேலையை விட்டு தூக்கிய US நிறுவனம்: ₹60 லட்சம் ஃபைன் போட்ட நீதிமன்றம்
Published on

எப்போ எப்போ என காத்திருந்து திடீரென ஊழியர்களை எதாவது ஒரு காரணம் கூறி பணியை விட்டு நீக்குவது குறித்தான பல்வேறு செய்திகள் தொடர்ந்து உலகெங்கும் அரங்கேறி கொண்டே வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் ப்ரைவசியை மீறும் வகையில் செயல்பட்டதாகக் கூறி நெதர்லாந்து நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது.

அதன்படி, ஃப்ளோரிடாவின் டெலிமார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி வேலைக்கு சேர்ந்திருக்கிறார். 70,000 யூரோ சம்பளத்தோடு, போனஸ், கமிஷன் போன்ற பல சலுகைகளையும் அந்த ஊழியர் பெற்றிருக்கிறார். சரியாக ஒரு ஆண்டுக்கு பிறகு Corrective Action Program என்ற மெய்நிகர் பயிற்சி காலத்தில் இணைக்கப்பட்ட அந்த ஊழியர், வேலை நேரமான 9 மணிநேரம் முழுவதும் ஸ்க்ரீன் ஷேரிங் உட்பட வெப் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

தொடக்கத்தில் இந்த கண்காணிப்பு முறையில் அசைட்டையாக இருந்த அந்த ஊழியருக்கு பின்னாளில் அவை பெரும் கடுப்பையே கொடுத்திருக்கிறது. ஆகையால், “ஒவ்வொருநாளும் 9 மணிநேரம் முழுவதும் என்னை கண்காணிப்பதை நான் விரும்பவில்லை. அது அசவுகரியமாக இருப்பதோடு, என்னுடைய தனியுரிமையையும் ஆக்கிரமிக்கிறது. ஆகையால் வெப் கேமிராவை ஆன் செய்யவில்லை” என அந்த ஊழியர் கூறவே அந்த நிறுவனமோ தங்களுடைய பாலிசியை மீறியதாகச் சொல்லி அவரை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறது.

இருப்பினும் வெப் கேமிராவை ஆன் செய்யாவிட்டாலும் என்னுடைய ஸ்க்ரீனை எப்போதும் நீங்கள் கண்காணித்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்” என்றும் அந்த ஊழியர் விளக்கமளிக்க நிறுவனமோ அதனை ஏற்க மறுத்திருக்கிறது. இதனையடுத்து நெதர்லாந்து நீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்டிருக்கிறார் அந்த நபர்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, “வேலை செய்ய மறுத்ததற்காகவே பணியில் இருந்து நீக்கினோம்” என நிறுவனம் கூறியிருக்கிறது. இதுபோன்று பணியாளர்களை திடீரென வேலையை விட்டு நீக்குவது ஃப்ளோரிடாவில் சர்வ சாதாரணமாக இருந்தாலும் நெதர்லாந்தில் தொழிலாளர் நலச்சட்டம் அப்படி இருக்கவில்லை. ஆகவே வேலை செய்யாததால்தான் அந்த ஊழியரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக கூறிய காரணத்தை நெதர்லாந்து நீதிமன்றம் ஏற்காததோடு, ஊழியருக்கு சாதகமாக தீர்ப்பளித்திருக்கிறது.

அதன்படி, “பணி நேரம் முழுவதும் ஊழியரை கேமிராவால் கண்காணிப்பது நியாமற்றது. இது நெதர்லாந்தில் அனுமதிக்கப்படாதவை. பணியாளரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கும் உரிமைக்கு எதிரானது. ஊழியரை நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்திருக்கிறார்கள். ஆகவே இழப்பீடாக சுமார் €75,000 (ரூ. 60 லட்சம்) மற்றும் தொழிலாளியின் ஊதியம், நீதிமன்றச் செலவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்கள் உள்ளிட்ட பிற கட்டணங்களைச் செலுத்த வேண்டும்” என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com