புதிய தனி உரிமை கொள்கையை திரும்பப்பெறுமாறு வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஒருவாரத்துக்குள் பதிலளிக்குமாறும் கூறியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கியது. இதையடுத்து இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் புதிய தனி உரிமை கொள்கையை இந்தியாவில் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, வணிக ரீதியான வாட்ஸ் அப் உரையாடல்களின் பதிவுகள், தாய் நிறுவனமான ஃபேஸ்புக் வசம் அளிக்கப்படுகிறது. இந்த புதிய தனி உரிமை கொள்கையை ஏற்காதவர்களின் வாட்ஸ் அப் இணைப்பு சிறிது காலத்தில் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு அளித்துள்ள அறிவிக்கையில், புதிய தனி உரிமை கொள்கையை திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் உள்ள பயனாளர்களுக்கும், இந்திய பயனாளர்களுக்கும் இடையே வாட்ஸ் அப் நிறுவனம் இருவேறு கொள்கைகளை பின்பற்றுவதாகவும் இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. வாட்ஸ் அப்-ன் புதிய கொள்கை இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கொள்கைக்கு விரோதமாக இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.