1976-ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் லூனா-24 விண்கலம் நிலவை ஆய்வு செய்துவிட்டு வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது. இதனையடுத்து சோவியத் யூனியன் ரஷ்யாவாக மாறிய பிறகு 47 ஆண்டுகளுக்குப் பின், லூனா வகை விண்கலம் மீண்டும் இந்த ஆண்டு செலுத்தப்பட்டது. சமீபத்தில், ரஷ்யாவின் ராஸ் கோஸ்மாஸ் ROSCOSMOS விண்வெளி நிறுவனம் அனுப்பிய லூனா-25 விண்கலம் திட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்த வருடத்தில், நிலவை நோக்கிய போட்டியில் இந்தியாவும் ரஷ்யாவும் இருந்த நிலையில், லூனா- 25 விண்கலத்தின் தோல்வியால், நிலவு ஆராய்ச்சிக்கான வெற்றிப் பயணத்தில் இந்தியா மட்டுமே இருந்து வருகிறது.
சந்திரயானின் ஆயுட்காலம், ஆய்வுக் கருவிகள், திட்ட செலவினம், தொழில்நுட்ப வடிவமைப்பு போன்றவை உலக அளவில் விஞ்ஞானிகளிடம் தனித்துவமான கவனத்தை பெற்றுள்ளன. இந்த ஆண்டு மட்டும் நிலவு ஆராய்ச்சித் திட்டங்களில், பல உலக நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த பட்டியலில் முன்னணியில் உள்ள இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது.
ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் Luna-25 விண்கலம் அனுப்பட்ட நிலையில், இந்த மாதம் SLIM Moon Sniper என்ற விண்கலத்தை ஜப்பான் அனுப்ப இருக்கிறது. அடுத்த மாதம் அமெரிக்காவின் Falcon-9 ராக்கெட் மூலம் Novac லேண்டர் நிலவுக்கு அனுப்பப்பட இருக்கிறது. இதேபோல், நவம்பர் மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ போடிக் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், Falcon Heavy என்ற ராக்கெட் மூலம் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது.
மேலும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், சீனா, இஸ்ரேல் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் தொடர்ச்சியாக நிலவை நோக்கி ஆய்வு விண்கலங்களை அனுப்ப உள்ளன. இதேபோல், லூனா-25 தோல்வி அடைந்த நிலையில், லூனா 26, 27, 28, 29 என நான்கு விண்கலங்களை அடுத்த ஆறு ஆண்டுகளில் நிலவுக்கு அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவும் சந்திரயான்-4 திட்டத்தை ஜப்பானோடு இணைந்து மேற்கொள்ள உள்ளது.
மேலும், சந்திரயான்-3 திட்டம் முழுமையாக வெற்றிபெறும் பட்சத்தில், நிலவு குறித்து ஆய்வு செய்ய சர்வதேச நாடுகள் இடையிலான போட்டி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.