வாட்ஸ்அப், டெலிகிராம் முதலிய தகவல் பரிமாற்ற செயலிகளானது, தொடர்ந்து தங்களது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் பல புதுவிதமான அப்டேட்களில் கலக்கிவரும் வாட்ஸ்அப் ஆனது, கூடுதலாக தங்களுடைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் "ALL Chats, Unread Chats, Favourite Chats" முதலிய 3 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாட்ஸ் அப் பயனாளர்களின் சின்ன சின்ன விருப்பங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் மெட்டா, கடைசியாக ஸ்டிக்கர்களை க்ரியேட் மற்றும் எடிட் செய்யக்கூடிய அப்டேட்டை அறிமுகம் செய்யும் செய்தியை வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது நமக்கு பிடித்தவர்களின் சாட்களை தனி Tab-ல் வைத்துக்கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தும் வேலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
நண்பர்கள் அல்லது விருப்பப்பட்டவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போதும் சரி, பல நாட்களுக்கு முன் பேசியிருந்தாலும் சரி, நாம் திரும்ப அந்த சாட்களை தேடும்போது வரிசையில் பின்னுக்கு சென்றிருக்கும். அப்போது நாம் ஸ்க்ரால் செய்து தேடிக்கண்டுபிடிக்கவேண்டிய நிலைமைக்கு செல்வோம். சிலநேரங்களில் தேடும் போது அந்த சாட்கள் கண்ணில் படாமல் வெறுப்பேற்றும். அப்படி பிடித்தவர்கள் மற்றும் நண்பர்களின் சாட்களை தேடிக்கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் இல்லாமல், ”ALL Chats, Unread Chats, Favourite Chats” தனி டாப்கள் மூலம் எளிதாக வகைப்படுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது வாட்ஸ்அப்.
அதன்படி சாட்களுக்கென தனி டாப்களை உருவாக்கும் வாட்ஸ்அப், அதில் ”ALL Chats, Unread Chats, Favourite Chats” தனித்தனி விண்டோக்களை சேர்க்கவிருக்கிறது. அதன்மூலம் விருப்பமான சாட்களை நாம் தனி Tab-ல் இணைத்துக்கொள்ளலாம். படிக்காத சாட்களும், அனைத்து சாட்களும் தனித்தனியாக வகைப்படுத்தப்படும்.
முதலில் இந்த அம்சம் ஐபோன் மற்றும் வெப் பயன்பாட்டாளர்களுக்கே கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.