செல்போன் நிறுவனங்களிலிருந்து அழைப்பதாகக் கூறி உங்களுக்கு வரும் அழைப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள் என்று கூறி வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வாய்ஸ் மெசேஜின் சாராம்சம் இதுதான்: செல்போன் நிறுவனங்களிலிருந்து அழைப்பதகாக் கூறி உங்களின் ஆதார் எண் குறித்த தகவல்கள் கேட்கப்படும். அப்படி அழைப்பவர்களிடம் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்தால், உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எனப்படும் ஒன்டைம் பாஸ்வேர்டையும் அவர்கள் கேட்பார்கள். அப்படி ஓடிபியையும் நீங்கள் கொடுத்துவிட்டால் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக சுருட்டி விடுவார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என அந்த வாய்ஸ் மெசேஜ் எச்சரிக்கிறது.
இது உண்மையா?. ஆதார் எண்ணைக் கொடுத்தால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தினை மொத்தமாக எடுக்க முடியுமா?. நாடு முழுவதும் ஆதார் கார்டுகளை வழங்கிவரும் இந்திய தனிநபர் அடையாள அமைப்பு இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. எந்த அமைப்போ அல்லது நிறுவனமோ உங்களது ஆதார் எண் குறித்த தகவல்களை போன் மூலம் கேட்பதில்லை. எனவே இதுபோன்ற போன்கால்களை பொதுமக்கள் நிராகரிக்கலாம். ஆனால், ஆதார் எண்ணைப் பகிர்ந்துகொள்வது உங்கள் இ-மெயில் முகவரியை பகிர்ந்துகொள்வது போன்றதே என்று கூறும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், ஆனால் ஓடிபி குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வது ஆபத்து என்கிறார்கள். வாடிக்கையாளர்களின் ஆதார் எண் குறித்த விபரங்களைக் கேட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் தரப்பிலிருந்து எந்தவித அழைப்பும் மேற்கொள்ளப்படுவதில்லை என்கிறார்கள் குறிப்பிட்ட நிறுவங்களைச் சேர்ந்தவர்கள். ஓடிபி, ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்ட வங்கிக் கணக்கு தொடர்பான தனிப்பட்ட விபரங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று வங்கிகள் தரப்பில் எச்சரிக்கிறார்கள். இதுபோன்ற தகவல்களை எந்த வங்கியும் கேட்பதில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.