வாட்ஸ்அப் செயலியில் தங்கள் கணக்கை 10 சாதனங்களில் பயன்படுத்துவது, 32 பேருடன் ஒரே நேரத்தில் வீடியோ காலில் பேசுவது உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கிய பிரீமியம் சந்தா அதன் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகியுள்ளது.
மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் மூலம் பெருமளவு வருமானத்தை ஈட்டி வரும் நிலையில் அந்நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் தளம் விளம்பரங்கள் இல்லாமல், சந்தா திட்டங்கள் இல்லாமல் இதுநாள் வரை இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெலிகிராம் செயலியில் அறிமுகமானது போலவே அதிக வசதிகளை பெறுவதற்கு சந்தா வசூலிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் தளம் முடிவு செய்துள்ளது.
ஆனால், அறிமுகமாகும் இந்த வாட்ஸ்அப் ப்ரீமியம் சந்தா வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படாது என்றும் வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்தாவை செலுத்துவதன் மூலம் பிசினஸ் கணக்கு பயனர்கள் தங்கள் வணிகப் பக்கத்தை தங்கள் வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்க முடியும். மொபைல் எண் இல்லாமல் தங்கள் வணிகப் பெயர் கொண்டு இயங்கும் வசதியும் இச்சந்தாவில் வழங்கப்பட உள்ளது.
தற்போது வாட்ஸ்அப் செயலியில் ஒரு கணக்கை 4 வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் 10 வெவ்வேறு சாதனங்களில் தங்கள் கணக்கை ஒரே நேரத்தில் பார்வையிட பயன்படுத்தும் வசதி வழங்கப்பட உள்ளது. மேலும் பிரீமியம் சந்தா செலுத்துவதால் 32 பங்கேற்பாளர்களுடன் வீடியோ காலில் பேசவும் முடியும். இந்த சந்தா வசதி கட்டாயமானதல்ல என்றும் அனைத்து பயனர்களும் கூடுதல் வசதிகள் இல்லாமல் பிற வசதிகளை வழக்கம்போல பயன்படுத்தலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த சந்தா வசதி வாட்ஸ் அப்பின் ஆண்ட்ராய் மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் பீட்டா வெர்ஷன்களில் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த சந்தா வசதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்தாவின் விலை விவரங்கள் வெவ்வேறு பிராந்தியங்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் இந்தியாவில் இதன் விலை என்ன என்பது அந்நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.