வாட்ஸ்அப் செயலியில் ஆடியோ அனுப்பும் முறையை மேலும் எளிதாக்கி வாட்ஸ்அப் நிறுவனம் அப்டேட் வழங்கியுள்ளது.
வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. பயனாளர்களை கவரவும் செயலியை எப்போதும் புதுமையாக வைத்துக்கொள்ளவும் வாட்ஸ் அப் அவ்வப்போது தனது செயலியில் பல அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.
அப்டேட்டுகளை உடனடியாக அனைத்து பயனாளர்களுக்கும் கொடுத்து விடாமல் முதலில் பீட்டா வெர்சன் எனப்படும் சோதனை பயன்பாட்டாளர்களிடம் மட்டும் சோதிக்கப்படுகிறது. அதன் வரவேற்பை அடுத்து அனைத்து பயனாளர்களுக்கும் அப்டேட் சேவை கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஆடியோ அனுப்பும் முறையை மேலும் எளிதாக்கி வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட் வழங்கியுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், ஒரே நேரத்தில் 30 ஆடியோ ஃபைல்களை அனுப்பும் புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் வழங்க உள்ளது. அது மட்டுமல்லாமல் ஃபைல்களை அனுப்புவதற்கு முன் பிரிவியூ எனப்படும் ஒருமுறை ஃபைல்களை சோதனை செய்யும் முறையும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அனுப்ப போகும் ஆடியோவை சோதனை செய்து பார்த்த பிறகு அனுப்ப முடியும் என்று தெரிவித்துள்ளது. இது தற்போது பீட்டா பயனாளர்களிடம் சோதனையில் உள்ளதாகவும் வரவேற்பை அடுத்து அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
குரூப் காலிங் ஷார்ட்கட், மல்டி ஷேர் ஃபைல்ஸ், தொடர்புகளை தரம் பிரித்தல் உள்ளிட்ட பல அப்டேட்டுகளை சோதனை முறையில் கொண்டு வந்து பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.