வாட்ஸ்அப் மெசஞ்சர் தளத்தில் சாட்களை (Chats) லாக் செய்யும் ‘லாக் சாட்’ (Lock Chat) அம்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளார் மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
நவீன உலகின் அன்றாட தேவையாக இருக்கும் மெசஞ்சர் ஆப்களில் முக்கியமானது வாட்ஸ்அப். உலகளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். சாட் செய்வது, வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்புவது, வீடியோ - ஆடியோ கால் வசதி என வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது வாட்ஸ்அப். மேலும் வாட்ஸ்அப் மூலம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்யும் சேவையும் இருக்கிறது. வாட்ஸ்அப்-க்கு இத்தனை பயனாளர்கள் இருப்பதாலோ என்னவோ, அந்நிறுவனம் சார்பில் அடிக்கடி புதிய புதிய அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கிறது.
அந்த வகையில் ‘லாக் சாட்’ என்ற அம்சம் இப்போது அறிமுகமாகியிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட்களை லாக் செய்யலாம். இதனால் தனிமனித சுதந்திரம் உறுதி செய்யப்படுகிறது. இந்தப் புதிய அப்டேட் மூலம் தனிப்பட்ட மற்றும் க்ரூப்-களில் பயனர்களின் மிகமுக்கியமான சாட்களை லாக் செய்ய முடியும். இவை லாக்டு சாட் பட்டியலில் இணைக்கப்பட்டதும், அதனை அதற்கான ஸ்கிரீனில் இருந்து மட்டுமே இயக்க முடியும். சாட் லாக் பட்டியலானது, பாஸ்வேர்டு அல்லது பயனரின் கைரேகை மூலமாக மட்டுமே திறக்க முடியும். ஒருவேளை புதிய அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்ட மொபைல் போனினை மற்றவர்கள் எடுத்து சாட்களை திறக்க முயற்சித்தாலும், அவர்களால் முழு சாட்களையும் பார்க்க முடியாது.
லாக்டு சாட்-இல் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், அவைகளும் பயனர் கேலரியில் அனுமதியின்றி தானாக சேமிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த நாம் சாட் செய்ய விரும்பும் Contact-க்கு செல்ல வேண்டும். பின்பு ப்ரொஃபைல் (Profile) பகுதிக்குச் செல்லவும். கீழே ஸ்க்ரோல் செய்து, "சாட் லாக் (Chat Lock)" என்பதை கிளிக் செய்யவும். பின் உங்கள் விரல் ரேகை பதிவு மூலம் சாட் லாக் செய்துகொள்ளலாம். இந்த லாக் செய்யப்பட்ட சாட்டை அடுத்த முறை ஓபன் செய்ய வேண்டுமென்றால், Locked Chats பட்டியலினை க்ளிக் செய்து, அங்கு உங்கள் விரல் ரேகை பதிவை வைக்க வேண்டும்.