உலகின் பல இடங்களில் வாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கத்திற்குள்ளானது பயனாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகிறது. அதனால் வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது. அதனடிப்படையில் அவ்வப்போது அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்தது. அதற்காக பயனாளர்களுக்கு சில அறிவுரைளையும் வழங்கியது. சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து திறன் பெற்ற ஹேக்கர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் ஹேக் செய்யப்பட வேண்டிய ஆட்களுக்கு ஹேக்கர்கள் வாட்ஸ் அப் அழைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்தது. அதன் மூலம் செயலியை கண்காணிக்கும் சாப்ட்வேர் குறிப்பிட்ட செல்போனில் தானகவே இன்ஸ்டால் செய்யப்படுவதாகவும் அதன்பின் அந்த செல்போன் ஹேக்கர்களால் தொடர் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து தங்களது பயனாளர்கள் அனைவரையும் உடனடியாக வாட்ஸ்அப் அப்டேட் செய்யக் கோரி அந்நிறுவனம் அறிவுறுத்தியது. இந்நிலையில், உலகின் பல இடங்களில் வாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கத்திற்குள்ளானது எனப் பயனாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுவரை வாட்ஸ் அப் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் பயனாளர்கள் ட்விட்டரில் தங்களது புகார்களை தெரிவித்து வருகின்றனர்.