சமூக வலைதளத்தில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். ஃபேஸ்புக் என்ற தனது முதல் சமூக வலைதளத்தின் மூலம் உலகலையே தன் கைக்குள் கொண்டுவந்தார். பின்னர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என முன்னணி சமூக வலைதளங்களையும் தன் நிறுவனத்தின் கீழே கொண்டு வந்து சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார் மார்க். ஆனால் இந்த விவகாரம்தான் தற்போது பிரச்னையாக தலைதூக்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசும், அதன் 48 மாகாண அரசுகளும் ஒரே நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
3 முக்கிய சமூக வலைதளங்களை கொண்டிருப்பதால் அந்த பயனாளர்களை வைத்து சிறிய சமூக வலைதளங்களை முடக்கி, நசுக்கி வருவதாக ஃபேஸ்புக் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சமூக வலைதளமாக எந்த சிறிய நிறுவனமும் முயற்சியை தொடங்கினால் அதனை ஆரம்பித்திலேயே நசுக்கிவிடுவதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அப்படி மீறி தலைதூக்கிய இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்களையும் பணத்தை கொட்டிக்கொடுத்து தன்னுடைய நிறுவனங்களாக மாற்றிவிட்டது என்கின்றனர் புகார்தாரர்கள். இப்படி மக்கள் எல்லாம் ஒரே நிறுவனத்தின் கீழ் இருப்பதால் அவர்கள் தகவல்கள் ஒரே இடத்தில் இருக்கின்றன.
போட்டியாளர்கள் இல்லை என்பதால், விளம்பரங்கள் மூலம் தங்களின் தனிப்பட்ட விருப்பத்தை ஃபேஸ்புக் எளிதாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் போன்ற பல பிரச்னைகள் இதற்கு பின்னால் இருப்பதாக புகார்தாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தலைவலியை உண்டாக்கியுள்ளது. புகாரின் சாரம்சமாக ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து இன்ஸ்டா, வாட்ஸ் அப்பை பிரிக்க வேண்டுமென வலுவான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் காரணமாக ஃபேஸ்புக்கின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.
இந்த வழக்கால் இப்போதைக்கு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு பிரச்னை இல்லை. வழக்குகள் நடைபெற்று தீர்வுகாண பல வருடங்கள் எடுக்கலாம். ஆனால் இந்த பிரச்னையால் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் தகவல்களின் பாதுகாப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா என்பதும் பயனாளர்களின் அச்சமாக உள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் இடையே ஃபேஸ்புக் பயனர் தரவுகளை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறது என்பதும் சரிவர தெளிவாக விளக்கப்படவில்லை. ஒருவேளை வழக்கில் அமெரிக்க அரசு வெற்றி பெற்று இன்ஸ்டா, வாட்ஸ்அப் ஃபேஸ்புக்கில் இருந்து பிரிந்து சென்றால் அது தனி நிறுவனங்களாக மாறும்.
தற்போது பயனர்களின் தகவல்களை ஒருங்கே வைத்துள்ள ஃபேஸ்புக் அப்போது என்ன செய்யும்? தகவல்கள் பாதுகாக்கப்படுமா? போன்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே ஃபேஸ்புக்கில் இருந்து இன்ஸ்டா பிரிந்தால் அதனை உடனடியாக தன்னுடன் இணைத்துக்கொள்ள ட்விட்டரும் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறது. பொழுதுபோக்காக நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் நம்மை வைத்தே பல ஆயிரம் கோடிகளை ஈட்டி வணிகம் செய்கின்றன. குறைந்தபட்சம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களுக்காகவது இந்த சமூக வலைதளங்கள் உறுதி அளிக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.